தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரு கோடி வீடுகளில் ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், ‘ஸ்மார்ட்’ மீட்டர் பொருத்தும் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த உள்ளது.
தமிழக மின் வாரியம், வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர் பொருத்தியுள்ளது. மின் ஊழியர்கள், 2 மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரை பார்த்து, பயன்பாட்டு அளவை ஆய்வு செய்கின்றனர். இதில் பல முறைகேடுகள் தடுக்கப்படுகின்றன. இதனால், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த மீட்டரில் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தி, தொலைதொடர்பு வாயிலாக அலுவலக, சர்வருடன் இணைக்கப்படும். மீட்டரில் கணக்கெடுக்கும் தேதி மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். குறிப்பிட்ட தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோரின் செல்போனுக்கு மின் பயன்பாடு, கட்டண விபரம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
முதல்கட்டமாக சென்னை தி.நகரில், 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் பரிசோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இதற்கிடையில், மத்திய அரசு, புதிய மின் வழித்தடங்கள் அமைக்க, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை துவக்கியது. அந்த திட்டத்தை தமிழகத்தில், ரூ.10,790 கோடி செலவில் ஏற்படுத்த மின் வாரியத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில், மத்திய அரசு சார்பில் ரூ.8,600 கோடி கடனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், மொத்த கடனில் 60 சதவீதம் மானியமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த மானியம் கிடைக்க வேண்டுமானால், தமிழக மின்வாரியம் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் 3 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த உள்ளன. அதில் முதல் கட்டமாக ஒரு கோடி மீட்டர்கள் கொள்முதல் உள்பட பணிகள், ஒப்பந்த நிறுவனம் மூலம் செய்யப்படு உள்ளன. இதற்கு முதல் கட்டமாக எந்தெந்த நகரங்களை சேர்ப்பது, எவ்வளவு மீட்டர்கள் தேவைப்படும் என கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.










