73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்த் – வாழ்த்துக்களை குவித்து வரும் பிரபலங்கள்

இந்திய  திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள், பொது மக்களின் தொடர்ச்சியான பதிவுகளால் சமூக வலைதளங்களில் #HappyBirthdayRajinikanth, #HappyBirthdaySuperstar போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தவிர, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்“ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திரையுலகில் ரஜினிகாந்த்தின் நெங்கிய நண்பரான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்த பதிவில், “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா“ என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், ‘‘ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள பதிவில், “பேரரசர், தலைவா ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “ அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் “ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் இருந்து ரஜினிகாந்துக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்