சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. சசிகலா எங்கிருந்து சம்பாதித்தார் இத்தனை கோடிகள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆடியேவை வெளியிட்டு கொதித்தெழுந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அப்போது, ஜெ.தீபா, அவரது தாய் பற்றி பல தகவல்களை கூறியதாக தெரிகிறது. அதில் ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் இணக்கம் இருந்ததில்லை, ஜெயலலிதாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் தாய் விஜயலட்சுமி புகார் தெரிவித்ததாக சசிகலா தெரிவித்தார் என தகவல்கள் பரவியது. இதனால் அதிமுகவில் சலசலப்பும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
சசிகலா உண்மை விரும்பியாக இருந்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்ற கேள்வியே எழுந்திருக்காது. எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற 3வது நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் எனது தாய், அத்தையை பற்றி புகார் கூறியதாக சசிகலா கூறியதில் உண்மை இல்லை. எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளை மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியுள்ளார்.
சசிகலா கூறுவது போல எனது தாய் விஜயலட்சுமி, கருணாநிதியையோ, வாழப்பாடி ராமமூர்த்தியையோ சந்தித்து பேசியது இல்லை. சசிகலாவுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசட்டும். எனது தாயை பற்றி பேசினால் நன்றாக இருக்காது. உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் போலீசிடமும், கோர்ட்டிலும் நிரூபிக்க வேண்டும். மக்களிடமும் நிரூபிக்க வேண்டும். அதை விட்டு எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றும், அத்தையை பற்றி எனது தாய் தவறாக பேசினார் என்று விமர்சிப்பது சரியில்லை.
அத்தையின் மரணத்தில் சசிகலாவின் செயல்களால் சந்தேகம் எழுந்தது. எந்த தவறும் செய்யாவிட்டால், அத்தையை பார்ப்பதற்கு என்னை அனுமதிக்காதது ஏன்? கேமராக்களை அணைத்து வைத்ததற்கு காரணம் என்ன? அவர்களின் ஆதாயத்துக்காக அத்தையை தவறாக பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும்.
எனது குடும்பத்தை பற்றி, எனது தாய் பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்து கொண்டிருக்க முடியாது. சசிகலா இதோடு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எனது தம்பியை கெடுத்து, எனது அப்பாவை கொன்று, எனது அத்தையை (ஜெயலலிதா) கொன்று எனது வாழ்க்கையை அழித்து, எனது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் சசிகலா அழித்துள்ளார். எனது தாயின் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் தடுத்தவர் சசிகலா.
எனது தம்பியை பிடித்து கைக்குள் வைத்திருக்கிறீர்கள். முதலில் அவனை விடுங்கள். அவனை பிடித்த சனியன் ஒழியட்டும். அரசியலை விட்டு நீங்கள் (சசிகலா) விலக வேண்டும். எங்கிருந்து சம்பாதித்தீர்கள் இத்தனை கோடிகளை? தைரியமிருந்தால் என்னிடம் வந்து பேசுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் என பேசலாம்.
இத்தனை கோடிகள் எப்படி வந்தது என்பது பற்றி அ.தி.மு.க. தொண்டர்களும் தமிழக மக்களும் கேட்க வேண்டும். தமிழக அரசு, ‘சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. அதற்கு பயந்து நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். எனது தாயை பற்றி பேசியதற்கு சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும் என ஆடியோவில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.










