தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகை காலங்களிலும் மக்கள் புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என ஒரு பக்கம் வாங்கி குவிக்கின்றனர். ஆனால் அதை விட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிகிறது. அதாவது மாதம் முழுவதும் மற்ற கடைகள் அடையும் லாபத்தை டாஸ்மாக் கடை ஒரே நாளில் லாபத்தை ஈட்டுகிறது. இதுவரை மது விற்பனையில் தமிழகம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழகத்தையே மிஞ்சும் அளவிற்கு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஹோலி பண்டிகையை முன்னிட்டு இங்கு மார்ச் 6-ம் தேதி மட்டும் ரூ.60 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அன்றைய தினம் மட்டும் சுமார் 26 லட்சம் மது பாட்டில்கள் டெல்லி மக்களால் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் ரூ.238 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மார்ச் மாதத்தில் இதை முறியடிக்கும் வகையில் ஹோலிக்கு முன் ஒரே நாளில் ரூ.60 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இதனால் மார்ச் 6-ம் தேதிக்கு பிறகு மது கடைகளில் பல முக்கிய மது வகைகள் தீர்ந்துவிட்டன. மார்ச் 8-ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பலரும் முன்கூட்டியே மதுவை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் மார்ச் 1-ல் ரூ.27.9 கோடி, 2-ல் ரூ.26.5 கோடி, 3-ல் ரூ.31.9 கோடி, 4-ல் ரூ.35.5 கோடி, 5-ல் ரூ.46.5 கோடி என மது விற்பனையாகியுள்ளது. டெல்லியில் மது விற்பனை கடந்த வருடம் ரூ.6,100 கோடி என்றிருந்தது. கொரோனா பரவலுக்கு பின் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் மார்ச் 6-ந் தேதி மட்டும் ரூ.60 கோடிக்கு விற்பனையாகியது டெல்லியில் ஹோலிக்கான மது விற்பனையில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தலைநகர் டெல்லி மதுவிற்பனையில் தமிழகத்தையே முறியடித்து சாதனை படைக்கும் என்பது போல் தெரிகிறது.







