இன்றைய காலகட்டத்தில் மொபைல் பயன்படுத்தாதவர்கள் என யாரும் இருக்கமுடியாது. மிக முக்கியமாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. அதாவது, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்வது… என அனைத்துக்கும் அதிகளவு பயன்படுத்தும் செல்போனை பயன்படுத்தாதவர்கள் இவ்வுலகில் மிக மிகக் குறைவு என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் இந்த செல்போன் தரும் ஆபத்துகளும் அளவிலாதது. குறிப்பாக சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து போடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதற்காக தனது 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டறிந்த போலீசார் தாய் ஷதி மற்றும் குழந்தையை வாங்கிய பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் தந்தையான ஜெய்தேவ் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.










