இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்‘.
அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் கொடுத்த இசை பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் நடிகராகவும் கலக்கி வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது ‘அடியே, டியர்‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு பக்கம் அனைத்து முன்னணி ஹீரோக்களின் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இவர் கோவையில் நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது ‘ஆயிரத்தில் ஒருவன் 2‘ படத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. செல்வராகவனின் அடுத்த பாகத்தின் கதையை கேட்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். மேலும் இப்படம் நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்“ என்று கூறியுள்ளார்.










