வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜக புதிய வியூகத்தை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது என முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டப்பேரவவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
மக்களவை தேர்தலை எந்த வகையில் எப்படி சந்திப்பது, ‘பூத்’ அளவில் பாஜகவை வலுப்படுத்த என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகளை, வரும் ஜனவரிக்குள் முடித்து, தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கக் கூடிய வகையில் தயாராக இருக்கிறோம்.
மக்களவை தேர்தல் மட்டுமின்றி, அதை தொடர்ந்து வரும் தேர்தல்களையும் எதிர்கொள்ளவும் பாஜக தயாராகி விட்டது. எங்களது நிலைப்பாடு, தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே. அதற்கு உரிய திட்டங்களை வகுத்து வருகிறோம்.
இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜக தான் தலைமை. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தை கெடுக்காமல் நிர்வாகம் செய்ய, புதிய அமைச்சரான உதயநிதி முன்வர வேண்டும். திமுக, – காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், பாஜகவும் தேர்தலை தனித்து சந்திக்க தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.










