நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில், நாங்கள் சொல்வதுதான் நடக்கும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், பெரியார் ஆகியோரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக, மதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும், அவர்களது சிலைகள், சமாதிகளில் அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது. அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியாக இருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அது எள்ளி நகையாடக் கூடிய கருத்தாக இருக்க முடியும். அதிமுகவில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களைத்தான் மற்றவர்கள் பெற முடியும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது உள்பட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம். திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும், ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுக்கலாம் என கூறினர். இப்போது ஏன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ரூ.1000 கொடுக்கிறார்கள் என்றார்.










