ஹிண்டன்பர்க் சர்ச்சையில் சிக்கிய அதானி குழுமத்தில் உள்ள நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி, உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 38- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர், உலகிலேயே மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற புகழுடன் வலம் வந்தவர் தான் கவுதம் அதானி. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வேளையில் கடந்த ஜனவரி மாதம் 24- ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க். அதில், அதானி குழும நிறுவனங்கள், பங்குகளின் விலையை அதிகரித்துக் காட்டியுள்ளன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளை அதானி குழும பங்குகள் வீழத் தொடங்கினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், 400- க்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கை வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தத்துடன் கடும் அமளியில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீட்டையும் அந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது. ஒரு மாதத்தில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவுக் கண்டுள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடும் முன் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 9,84,000 கோடி ரூபாய் ஆகும். அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது அவரின் சொத்து மதிப்பு 2,73,880 கோடி ரூபாயாக சரிவுக் கண்டுள்ளது.
போர்ப்ஸ் (Forbes) உலக பணக்காரர் பட்டியலில் 38- வது இடத்திற்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 6,84,000 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.










