தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சத்தை அபேஸ் செய்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனியார் நிதி நிறுவனம் இயங்குகிறது. இங்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 2 வாலிபர்கள், 45 சவரன் நகைகளை அடகு வைத்தனர். அதை மதிப்பீடு செய்து, நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சத்தை பெற்று சென்றனர்.
இந்தவேளையில், கடந்த சில நாட்களுக்கு முன் நிதி நிறுவனத்தில் ஆண்டு கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வாலிபர்கள் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தபோது, அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என தெரிந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வாலாஜாபேட்டை போலீசில், நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வாலாஜாபேட்டை அருகே பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31), அஜித் (22) ஆகியோர் போலி நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த 2 பேரையும், நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.









