முத்திரை இல்லாத தராசுகள் பயன்படுத்தி மோசடி – மீன் வியாபாரிகளின் தில்லாலங்கடி வேலை

நாம் அனைவரும் பொருட்கள் வாங்கும்போது, எடைபோட்டு வாங்கி செல்கின்றோம். அதை வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு, எடை குறைந்து இருப்பது தெரிகிறது. பின்னர், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் சண்டையிடுவது வாடிக்கையாக உள்ளது.

இதுபோல் சில ரேஷன் கடைகளிலும் நடப்பதை அறிந்த அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி, அங்குள்ள போலி பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால், சில வியாபாரிகள், பட்டப்பகலில் பொதுமக்களிடம் போலி எடை கற்களை பயன்படுத்தி விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் மீன் மார்க்கெட்டில் ராமேஸ்வரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பல்வேறு வகை மீன்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக அங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இந்த மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் வாங்கும் மீன்களின் எடை குறைவாக இருப்பதாக, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்தன.

இதையடுத்து மதுரை மாவட்ட தொழிலாளர் துறை அமலாக்கபிரிவு உதவி கமிஷனர் மைவிழிசெல்வி தலைமையில் 25 அதிகாரிகள் அடங்கிய குழுவினர், 18.12.2022 காலை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டுக்கு மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சில வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 26 வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதற்கு, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அங்கு சென்ற, அவர்களை கலைய செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி கமிஷனர் மைவிழி செல்வி, மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் அனைவரும் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினோம். ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால், சோதனை நடத்தி போலி தராசுகளை பறிமுதல் செய்தோம். சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்து நோட்டீஸ் அளித்திருக்கிறோம் எனத் தெரிவித்து இருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்