அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி – பாஜக மாவட்ட தலைவருக்கு போலீஸ் வலை

மத்திய அரசின் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக, ரூ.11 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தலைவரை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியன். மாநகர பாஜ துணைத்தலைவர். இவருக்கு கார்த்திக், முருகதாஸ் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு வேலைக்காக, கட்சியினர் சிலரை பாண்டியன் அணுகியுள்ளார். அப்போது, திருத்தங்கலை சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியேரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர், மூத்த மகன் கார்த்திக்கை தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2வது மகன் முருகதாசை ரயில்வேயிலும் வேலையில் சேர்த்துவிடுவதாக உறுதியளித்தனர். மேலும், வேலையில் சேர்ப்பதற்கு, பணம் செலவாகும் என அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு பாண்டியன் சம்மதித்துள்ளார்.

இதைதொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ரூ.11 லட்சம் வாங்கி கொண்டனர். ஆனால் 5 ஆண்டுகள் கடந்த பின்னரும், வேலை வாங்கி தரவில்லை. இதனால், பணத்தை திரும்ப தரும்படி பாண்டியன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தரவில்லை. இதுபற்றி பாண்டியன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மாநில தலைவர், அவர்களை அழைத்து எச்சரித்த பிறகு, தலா ரூ.2 லட்சத்துக்கு 5 காசோலைகள், ரூ.1 லட்சத்திற்கு ஒரு காசோலை பாண்டியனிடம் கொடுத்தனர். சில மாதங்கள் கழித்து ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்து ஒரு காசோலையை மட்டும் பாண்டியனிடம் இருந்து திரும்ப பெற்றனர். பாக்கியிருந்த காசோலைகள் வங்கியில் செலுத்தி பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் பாண்டியன், தனக்கு தரவேண்டிய ரூ.9 லட்சத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதுகுறித்து பாண்டியன், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கலையரசனை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்