வரும் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்தவாரம் பொங்கல் ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட உள்ளார் என தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக அதற்கான அரிசி, வெள்ளம், கரும்பு உள்பட பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் சில பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து பொங்கல் தொகுப்புடன் ஒரு தொகை வழங்கப்பட்டது.
ஆனால், இந்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்புக்கு பதில் ரூ.1000 ஆயிரம் வழங்க இருப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ரூ.5000 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் அரிசி, வெல்லம், கரும்பு உள்பட பொங்கல் பொருட்களுடன் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணத்துக்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்பட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக அத்தியாவசிய பொருட்களும், மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தரமில்லாமல் இருந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் வந்தன. அதில் தரமற்ற பொருட்களின் படங்களும் வெளியானது. இந்த விமர்சனங்களை சந்தித்த தமிழக அரசு, இந்தாண்டு ரொக்கமாக வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த வாரம் இதுபற்றிய ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடுவார் என தெரியவந்துள்ளது. அதில் பொங்கல் தொகுப்பாக ரொக்கம் கிடைக்குமா அல்லது தரமான பொருட்கள் கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.










