தற்போது, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களை அரசு மேம்படுத்தி வருகிறது. ஆனாலும், அங்கு ஏதேனும் குறை உள்ளது. மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள், ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் உள்ளது. சில இடங்களில் டாக்டர்கள் இல்லாமல், நர்சுகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற நேரங்களில் விபத்து, பிரசவம், பாம்பு கடி உள்பட அவசிய தேவைக்கு பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றாலும், போதிய சிகிச்சை வழிமுறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் பலிகள் அதிகரிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுபட்டியை சேர்ந்தவர் ராம்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி அரங்க நாயகி (19). இவர்களக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. தற்போது அரங்க நாயகிக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், அரங்க நாயகிக்கு 17.12.2022 இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள், அவரை புதுபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அதிகாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில மணி நேரத்தில், குழந்தை இறந்தது. அதே நேரத்தில், அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது. உடனே, மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனாலும், செல்லும் வழியிலேயே அரங்கநாயகி பரிதாபமாக இறந்தார்.
பிறந்த சேய் மற்றும் தாய் அடுத்தடுத்து இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளித்ததால், தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்த சென்றனர்.










