தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தெலுங்கு திரையுலகமே மருத்துவமனை முன் திரண்டு அப்பா ராம் சரணுக்கு வாழ்த்து கூறிவருகிறார்கள்.
மருத்துவமனை முன்பு மீடியாக்களும், ரசிகர்களும் குவிந்தனர். 10 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்திருப்பதுதான் இந்த கொண்டாட்டங்களுக்கு காரணமாகும். ராம்சரணின் தந்தையும், தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மருத்துவமனையின் வாசலில் நின்று வாழ்த்து சொல்ல வருகிறவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “ எங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த பெண் குழந்தை எங்களுக்கு மிகவும் முக்கியம். ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம்.
பல ஆண்டுகளுக்கு பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார். ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.










