கவர்னர் மாளிகையில் மர்மபொருள் திடீரென வந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர். பின்னர் சாதாரண விஷயமாக முடிந்தது.
அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் வீடுகளில் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதாக அடிக்கடி வதந்தி பரப்பப்படுகிறது. அதே நேரத்தில், தங்களை பிரபலமாக்க வேண்டும் என சிலர், தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி, அவர்களே போலீசில் சிக்கிய சம்பவங்களும் நடக்கிறது. இதற்கிடையில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக கோவை கார் குண்டு வெடிப்பு, மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு உள்பட பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அரசியல் பிரமுகர்கள், முக்கிய அலுவலகங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தவேளையில்,தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு காரணங்களால், திமுக கடும் விமர்சனம் செய்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல இடங்களில் பேசும்போது, தமிழக வரலாறு, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா உள்பட பல விஷயங்கள் பேசுகிறார். இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அனைத்து கட்சியினரும் ஜனாதிபதியிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத்திலும் கவர்னரை நீக்க வேண்டும் என பேசப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆன்லைன் ரம்மி க்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அவசர சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்குஅனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர், இதுவரை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், அவசர சட்டம் காலாவதியாகி, மசோதா மட்டும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை உள்ளது. இங்கு 17.12.2022 மாலை திடீரென ஒரு மர்மபொருள் வந்து விழுந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மோப்பநாய் மற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது கவர்னர் மாளிகை வளாகத்தில் ஒரு பொருள் கிடந்தது.
அதை கைப்பற்றி அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அது, வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தெரியவந்தது. வானிலை ஆராய்ச்சிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் செயலிழந்து கவர்னர் மாளிகையில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் கவர்னர் மாளிகையில் மர்ம பொருள் விழுந்தது தொடர்பாக 5 தனிப்படை அமைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










