தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கில் உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமானம் மூலம் திருச்சி சென்றார். அப்போது அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
2021 ஆகஸ்ட் 5ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து மக்கள் பயனடைகின்றனர். இதைதொடர்ந்து, தற்போது அந்த திட்டம், ஒரு கோடியை எட்டியுள்ளது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தை திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்தவர் பெறுகிறார். அதை, வரும் 29ம் தேதி, முதலமைச்சர் நேரில் வழங்குவார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழக முதலமைச்சர் மாற்றியதே காரணம். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும் 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது.
கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். கொரோனா குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.










