தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து பின்னர் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக மாறியவர் சூரி. சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவரது பரோட்டா காமெடி அதிகளவில் மக்களால் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி, சிவகார்த்திகேயன் என அனைவரின் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்த சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை‘ என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஹீரோவாக நடிக்கும் முதல் படமே வெற்றிமாறன் இயக்கம், இளையராஜா இசை என பெருமைமிகுந்த தருணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மற்றொரு படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். “கூழாங்கல்“ என்ற படத்தை இயக்கிய வினோத்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு “கொட்டுக்காளி“ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனது தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை மிகவும் திறமை வாய்ந்தவரும், விருது பெற்ற இயக்குனருமான வினோத்ராஜ் இயக்குகிறார். இதில் எனது அன்பு அண்ணன் சூரி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்“ என்று பதிவிட்டுள்ளார்.










