தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜூனா மகனான இளம் நடிகர் நாக சைதன்யா தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள ‘கஸ்டடி‘ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் வரும் மே 12-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளனர்.
குறிப்பாக நாகசைதன்யா இந்த படம் தொடர்பாக யுடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். தமிழில் இர்பான் வியூ என்கிற ஒரு யுடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்த போது, அவரிடம் இரண்டரை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்த பின்னர், நட்பாக இருப்போம் என அவரது மனைவி கூறியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாகசைதன்யா “பிரிவோம் என முடிவு செய்து பிரிந்த பின்னர் எதற்காக நண்பர்களாக இருக்க வேண்டும்…..? பிரிந்த பின் நண்பர்களாக தொடர்வோம் என்று கூறும் வார்த்தையே என்னை அதிகம் கடுப்படிக்கிறது அப்படி ஒரு நட்பு எனக்கு தேவையில்லை“ என்று பதில் அளித்துள்ளார்.










