நடிகர் சரத்பாபு இறந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுநேரத்தில் அவரது சகோதரி அதனை மறுத்துள்ளார். மேலும் சரத்பாபு நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக, குணசித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சரத்பாபு. இவர் 1977-ம் ஆண்டு ‘பட்டினப்பிரவேசம்‘ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து ‘மெட்டி, முள்ளும் மலரும், உதிரிபூக்கள், சட்டம், சங்கர் குரு வேலைக்காரன், முத்து, அண்ணாமலை‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னடம் என 200 திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்சனை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று அவர் காலமானதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூகவலைதளங்களிலும் அவர் இறந்ததாக செய்திகள் பரவின. மேலும் கமல், குஷ்பு உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சற்று நேரத்திலேயே அவர் இறக்கவில்லை என சரத்பாபுவின் சகோதரி செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, “சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றிய அனைத்து செய்திகளும் தவறாக வருகின்றன. அவர் ஓரளவுக்கு குணமடைந்து வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விரைவில் அவர் பூரணமாக குணமடைந்து மீடியாக்களிடம் பேசுவார் என்று நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்“ என கூறியுள்ளார்.










