தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே‘ படத்தின் மூலம் அறிமுகமாகி, தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை த்ரிஷா. பல வெற்றிகளை குவித்த போது கிடைத்த வரவேற்பு, புகழை விட ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான வரவேற்பு வேறொரு தளத்தில் உச்சத்தை தொட்டுவிட்டது.
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. இதற்கு முன்பு வேறு எந்த ஒரு நடிகையும் இவ்வளவு நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இந்த நிலையில் இன்றுடன் 40 வயதை நிறைவு செய்யும் த்ரிஷாவுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். த்ரிஷாவைப் பார்த்தால் 40 வயதானவர் போல் இல்லை எனவும், இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக ‘பொன்னியின் செல்வன் 2‘ படத்திற்காக ‘சோழர்களின் பயணம்‘ புரமோஷனில் அவர் கலந்து கொண்ட போது விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதற்கே ரசிகர்கள் அமோகமாகப் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










