அரசியல்வாதிகள் மதுவிலக்கு என்று பேசினாலும் அது வாய் வார்த்தைகளோடு முடிந்துவிடும். எத்தனை குடும்பங்கள் மதுப் பிரியர்களால் நடுத்தெருவுக்கு வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், மதுவிற்பனை படுஜோராக, அதுவும் நாளுக்கு நாள் அதிகமாகி, புலி பாய்ச்சலில் சென்றுகொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக, பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். மதுவிற்பனை என்பது சிகரம் தொடும் அளவுக்கு தன் வேகத்தை அதிகப்படுத்தும். அதேபோல்தான், கேரளாவில் ’பெவ்கோ’ என அழைக்கப்படும் அரசு மதுபான கழகம் சார்பில் மது விற்பனை நடந்து வருகிறது. இந்த பெவ்கோவின் கட்டுப்பாட்டில் கேரளா முழுவதும் 250-க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மது விற்பனை களை கட்டியுள்ளது.
புத்தாண்டுக்கு முதல்நாள் மட்டும் 107 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அன்றைய தினம் திருவனந்தபுரம் பவர்ஹவுஸ் ரோட்டில் உள்ள ஒரே கடையில் மட்டும் 1.12 கோடிக்கு மதுபாட்டில் விற்றது. அதற்கு அடுத்தப்படியாக கொல்லம் ஆசிரமத்தில் உள்ள சில்லரை விற்பனை கடையில் 96.59 லட்சத்திற்கு மது விற்பனை நடந்திருக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் ஒரே நாளில் மது விற்பனையாகி உள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையுள்ள 10 நாட்களில் மட்டும் 686.28 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே 10 நாட்களில் 649.32 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு, அதைவிட கூடுதலான அளவு மதுவிற்பனையாகி இருப்பது, கேரளாவில் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், அவர்கள் அருந்தும் மதுவின் அளவு அதிகரித்து இருப்பதையுமே இது காட்டுகிறது.










