இன்றைய சினிமா உலகில் எந்தவொரு படம் திரையில் வெளியானலும், அந்தப் படம் சில நாட்களிலேயே ஓடிடியிலும் வெளியாகிவிடும். இன்னும் ஒரு சில படங்கள் திரையரங்குகளில் வெளிவரமால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஒரு படம் தியேட்டரில் வெளியானால் 42 நாட்களுக்கு பிறகே ஓடிடி-யில் வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன்படி தான் கடந்த சில வருடங்களாக ஓடிடியில் மலையாளப் படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் ஜூட் அந்தோணி இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், கலையரசன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘2018‘ படம் வெளியானது.
இந்தப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படம் தியேட்டரில் வெளியாகி 33 நாட்கள் ஆன நிலையில் இன்று முதல் ஓடிடி-யிலும் வெளியாகிறது. இதைக் கண்டித்து இன்றும், நாளையும் கேரளாவில் தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.










