நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘லியோ‘ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என பல முன்னணி பிரபலங்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது காஷ்மீர், டில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் முகாமிட்டுள்ள லியோ படக்குழுவினருக்கு என்னாச்சு? என்கிற கேள்விகள் சோஷியல் மீடியாவில் எழுந்து வந்த நிலையில் தற்போது, லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது.
அதில், ‘காஷ்மீரில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா‘ என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










