சின்னத்திரையில் விஜய் டிவியில் 2011-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்‘ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. மேலும் இந்த தொடர் மூலம் பெரிய அளவில் பிரபலமும் அடைந்தார். அதன் பிறகு 2013-ம் ஆண்டில் சரவணன் மீனாட்சி 2-வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார்.
பெங்களுரைச் சேர்ந்த நடிகை ரட்சிதா தனது நடிப்பாலும் திறமையாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் கன்னடம், தெலுங்கு மொழிகளின் சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்‘ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘நாச்சியார்‘ என்ற தொடரில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
அதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நடிகை ரட்சிதா, மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், “நான் கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார். மேலும், போன் செய்து மிரட்டுகிறார்“ என்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். காவல் நிலையம் வந்த நடிகர் தினேஷ் நாங்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்து இருக்கிறோம். சட்டப்படி நாங்கள் இன்னும் பிரியவில்லை, வேண்டுமானால் ரட்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக்கொள்ளலாம் என்றார்.
இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










