ராகுல் காந்தி, கொள்கை அரசியலை பற்றி பேசுகிறார் என, புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து, தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாமனிதர் நேரு என்ற புத்தகத்தை எழுதினார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது.
நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரசின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்துக்கு எதிரானவர் நேரு.
வகுப்பு வாதமும், தேசிய வாதமும் சேர்ந்திருக்க முடியாது என கூறினார். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என அவர் உறுதியளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்து காட்டுகிறது. தமிழகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதியை போல் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.
ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார். சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சு கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாக இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.










