அரசு சட்டக் கல்லுாரியில் சட்டம் பயின்ற திருநங்கை கண்மணி, வழக்கறிஞராக பதிவு செய்தார்.
சென்னை, வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வழிவிட்டான்- – வள்ளி தம்பதி. இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் கடைசியாக பிறந்த மகன், பாலின மாறுபாடு காரணமாக, தன்னை திருநங்கை கண்மணியாக அங்கீகரித்து, தற்போது இளம் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லுாரியில், ஐந்து ஆண்டு படிப்பில் சட்டம் பயின்ற முதல் திருநங்கை கண்மணி, 22. இவருக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், நேற்று வழங்கினார். சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியின் போது, புதுப்பாக்கம் சட்டக் கல்லுாரி முதல்வர் கவுரி ரமேஷ், தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் ராஜாகுமார் உடனிருந்தனர்.










