தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கும் ‘தி டெஸ்ட்‘ படத்தில் தற்போது நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜவஹர் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களுக்கு பிறகு மற்றொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அதன் படி, டிரைட்டென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் மாதவனும், கங்கனாவும் இணைந்து ஏற்கனவே ஹிந்தி படங்களான ‘தனு வெட்ஸ் மானு, தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்‘ ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தற்போது 8 வருடங்களுக்கு பின் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.










