பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வரும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரியாமணி அளித்த பேட்டி ஒன்றில் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக நடிக்கும் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் பிரியா மணி கூறியதாவது, “ அவர் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தேன். அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா என்ற யோசனையில் இருந்தேன். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் என்னைப் பார்த்ததும் வழக்கம்போல கட்டியணைத்தார். ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தினமும் பல பிரபலங்களை ரசிகர்களை சந்திக்கும் அவர் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய என்னை ஞாபகம் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது“ என்று கூறியுள்ளார்.










