விஜய் நடிப்பில் உருவான ‘கில்லி‘ படத்தில், விஜய்க்கு தந்தையாக போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் ‘அனேகன், தில், ஏழுமலை, மலைக்கோட்டை, உத்தமபுத்திரன்‘ என பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 60 வயதை எட்டிய ஆஷிஷ் வித்யார்த்தி தொழிலதிபரான ரூபாலி பருவா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். ரூபாலி பருவா முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் ஆவார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் நண்பர்கள் முன்னிலையில் கோல்கட்டாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது இவர்களது திருமண போட்டோக்கள் சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது. இருப்பினும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி பெயர் ராஜோஷி வித்யார்த்தி. இவர் இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுக்கு 23 வயதில் ஆர்த் வித்யார்த்தி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். இந்நிலையில் 23 வயதான ஆர்த் வித்யார்த்தி தந்தையின் இரண்டாவது திருமணத்திற்கு ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.










