இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தற்போது ‘மார்கழி திங்கள்‘ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தினை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சுசீந்திரன். அதில் அவர் கூறியதாவது, “ பழனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ‘மார்கழி திங்கள்‘ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிகப்பெரிய கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம்.
அப்போது திடீரென்று புயல் காற்று வீசி கனமழை பெய்தது. அப்போது பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் கீழே விழுந்தன. ஒரு லைட்டின் மீது இடி தாக்கியது. அப்போது அதன் அருகில் நின்று கொண்டிருந்த லைட்மேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்“ என்று அந்த விபத்து குறித்த ஒரு தகவலை வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் சுசீந்திரன்.










