தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘லியோ‘. இதில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பல முன்னணி திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி‘ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது என இயக்குனர் லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘லியோ‘ படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமையை பிரபல நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.










