தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. இவரின் படம் என்றாலே த்ரில்லர் படமாகத் தான் இருக்கும். ‘டிமான்ட்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், டி பிளாக், தேஜாவு‘ என தொடர்ந்து த்ரில்லர் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அருள்நிதி இம்முறை வேறு ஒரு பரிமாணத்தில் நடிக்க உள்ளார். அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்‘ என்னும் தலைப்பில் உருவாகி வருகிறது.
இப்படத்தை ‘ராட்சசி‘ படத்தை இயக்கிய சை.கௌதம ராஜ் இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர் ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அருள்நிதியின் முறுக்கு மீசை, வேட்டிக்கட்டு போன்ற வித்தியாசமான கெட்டப் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனது முதல் படமான ‘வம்சம்‘ படத்தில் கிரமாத்து இளைஞன் வேடத்தில் நடித்து அசத்திய அருள்நிதி அதன்பிறகு த்ரில்லர் படம் நோக்கி நகர்ந்துவிட்டார். இப்படத்தின் மூலம் மீண்டும் கிராமத்து ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.










