விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக ஈட்டி, பள்ளி மாணவனின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
விளையாட்டு போட்டிகள் நடக்கும்போது, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும். ஓட்டப் பந்தயத்தில், ஓடும்போது, கால்பந்து போட்டியில் ஓடும்போது, கிரிக்கெட்டில் பந்து வீசும்போது என பல்வேறு விளையாட்டுகளில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம். குறிப்பாக, விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தால், வீரர்களுக்கு கட்டாயம் அடி விழுவது உறுதி என விளையாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இதுபோல், பள்ளிகள் அளவில் நடந்த விளையாட்டு போட்டியில், ஈட்டி எறிதலின்போது, மாணவன் ஒருவன் மீது ஈட்டி பாய்ந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் போலங்கீர் ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள் (17.12.2022) நேற்று நடந்தது. அதில் ஈட்டி எறிதல் போட்டி நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் 9ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி பாய்ந்தது. இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்து, மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறும் சிறுவனிடம் நலம் விசாரித்தார். மேலும் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், மருத்துவ செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என உறுதியளித்தார்.










