மகாராஷ்டிர மாநில சட்டசபையில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது இரண்டரை மாதக் கைக்குழந்தையுடன் வந்தபோது, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகத்துடன் தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் உறுப்பினரான சரோஜ் அஹிரேவாக் என்ற உறுப்பினர் கைக்குழந்தையுடன் வந்த தகவல் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தமது அலுவலகத்தில் இருந்து அவசரம் அவசரமாக சட்டசபைக்கு வந்தார்.
வந்ததும் உடனே குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் தாய்க்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் செல்பி எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ள உறுப்பினர்கள் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். அந்த பெண் உறுப்பினர் தனது ஆண் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றிக் கொண்டு வந்திருந்தார்.
அவருடன் அவரது கணவர் டாக்டர் பிரவீன் அஹிரேவாக், மாமியார் கல்பனா வாக் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து கொண்டனர். வீட்டில் குடும்பத் தலைவியாகவும், குழந்தையின் தாயாகவும், பொது வாழ்வில் மக்கள் பிரதிநிதியாகவும் கடமையைச் செய்வது சவாலான பணி.
அதைத் தாங்கள் திறம்படச் செய்து வருகிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிர சட்டசபை வரலாற்றில், பெண் உறுப்பினர் ஒருவர் கைக் குழந்தையுடன் சபைக்குள் வந்தது இதுவே முதல் முறையாகும்.










