பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 304 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும், அணியின் அதிரடி வீரர் ஹாரி புரூக் சதம் அடித்து, அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் வெளியேறினர். பின்ன் களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசம், ஷாகில் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அவர்கள் அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி 2ம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், (டிச.20) 4வது நாள் ஆட்டம் தொடங்கிய ஆட்டதில், 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தபோதும், வெற்றிக்கு 55 ரன்கள் தேவை என ஆனது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 28.1 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது.










