தில்லியில் இன்று காலை (டிச 14) பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி தெற்கு துவாரகா பகுதியில் காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவி மீது ஆசிட் வீசுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அதை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஆசிட் வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.







