தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகர் விக்ரம். அவருக்கு திரையுலகில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘சேது‘. இப்படத்தில் அவர் வித்தியசமான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
இப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான முக்கியப் படங்கள் ‘பிதாமகன், அந்நியன், ஐ‘ ஆகிய படங்களிலும் தன்னுடைய தோற்றத்தை கடுமையாக மாற்றியிருப்பார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்‘ படத்திற்காக தலைமுடி, தாடி வளர்த்து தன்னுடைய உடலைக் குறைத்து வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விலா எலும்பில் காயம் ஏற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார்.
அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சில நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது ஓய்வில் இருப்பார் என்று சொல்கிறார்கள். ‘தங்கலான்‘ படத்தின் கதை அந்தக் காலக் கதையாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பில் நடிக்கும் போது தினமும் விக்ரமிற்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு நடித்து வருகிறாராம்.
ரத்தம் சிந்தி உழைப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் ‘தங்கலான்‘ படப்பிடிப்பில் படக்குழுவினரும், விக்ரமும் உண்மையிலேயே அப்படித்தான் உழைத்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படமாக ‘தங்கலான்‘ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










