தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பீட்சா, சேதுபதி‘ படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் நடிகை ரம்யா நம்பீசன். இவர் அதே சமயம் மலையாளத்திலும் பிஸியாக நடித்து வந்தார். இவர் கடந்த 2017-ல் நடந்த நடிகை கடத்தல் நிகழ்வு சம்பவத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாலும், மலையாள திரையுலகில் சில நடிகைகளால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் நல அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததாலும் மலையாள திரை உலகில் இருந்து மறைமுகமாக ஒதுக்கப்பட்டார். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்று நடித்து வரும் நிலையில் தமிழில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மலையாளத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘பி 32 முதல் 44 வரை‘ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரம்யா நம்பீசன். வெவ்வேறு பகுதிகளில் இருந்து நகரத்திற்கு வந்து ஒரு விடுதியில் ஒன்றாக தங்கி இருக்கும் பெண்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 7-ம் தேதி இப்படம் வெளியாகிறது. மேலும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் இவர் ஜோடியாக நடித்துள்ள ‘தமிழரசன்‘ திரைப்படமும் மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக தனது பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.










