பீகாரில் உடல்நிலை சரியில்லாமல் மரண படுக்கையில் கிடந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவசர சிகிச்சை பிரிவில் தாயின் முன்பு ஒரு மகள் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே அந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் குராரு தொகுதி பாலி கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமாரின் மனைவி பூனம் குமாரி வர்மா. இவருக்கு உடல்நிலை மோசமாகி கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பூனம் குமாரியின் உடல்நிலை மேலும் மோசமாகி, எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்று மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினர்.
இந்த சூழ்நிலையில், பூனம் கடைசி ஆசையாக தனது மகள் சாந்தினி, தனக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே சாந்தினிக்கும் சேலம்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமித் கவுரவ் என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க பேசுச்சு வார்த்தை இருந்து வந்தது. மேலும், இருவருக்கும் டிசம்பர் 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறுவதாகவும் இருந்தது. இந்நிலையில், பூனம் தனது கடைசி ஆசையை கூறியதும், சுமித்தின் குடும்ப உறுப்பினர்களிடம் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு வீட்டாரும் பரஸ்பர சம்மதத்துடன் பூனத்தின் கடைசி ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சுமித் கவுரவ் மற்றும் சாந்தினியும் அவசரநிசிகிச்சை பிரிவில், தாயின் முன்பு மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.
மகளின் திருமணத்தை மரண படுக்கையில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த தாயை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கள் குளமாகின. மாலை மாற்றிக்கொண்ட கையோடு இருவரும் பூனம் குமாரிடம் ஆசி பெற்றனர். பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து பூனம் குமாரியின் உயிர் சத்தமில்லாமல் பிரிந்தது.










