தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், பென்குயின், அண்ணாத்த‘ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் கைவசம் இருக்கும் ‘மாமன்னன், சைரன், ரகதாதா‘ படங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நடித்து முடித்துள்ள படம் ‘தசரா‘.
இப்படத்தில் நானி, சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, மீரா ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், ரோஷன் மேத்யூ மற்றும் சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நானி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயராகும் படம் என்கிறார்கள். ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற மார்ச் 30-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்ததையொட்டி படப்பிடிப்பில் பணியாற்றிய 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயத்தை பரிசாக கீர்த்தி சுரேஷ் வழங்கியுள்ளார். இச்செயல் அப்படக்குழுவினருக்கு மகழ்ச்சியை தந்துள்ளது. மேலும், இதற்கு முன் கீர்த்தி சுரேஷ் தான் நடித்த பெரும்பாலான படங்களின் நிறைவு நாளில் இதே போன்று கலைஞர்களுக்கு தங்க காசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.










