சர்ச்சையில் சிக்கிய ‘மாமன்னன்‘.. உதயநிதியால் வந்த சிக்கல்

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்‘. இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் 29-ம் தேதி இப்படம் திரையில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உதயநிதி அமைச்சராகிவிட்டதால் இந்தப்படம் தான் அவரது கடைசி படம் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘மாமன்னன்‘ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்த படத்திற்கு தடை கோரி  சென்னை ஐகோர்ட்டில் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ கே.எஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி, யோகி பாபு நடிக்க ‘ஏஞ்சல்‘ என்ற படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டு 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இன்னும் 20 சதவீதம் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. ‘ஏஞ்சல்‘ படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்‘ படத்தில் நடித்துள்ளார் உதயநிதி.

இதுதான் தனது கடைசி படம் என்றும் கூறியுள்ளார். இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். ‘ஏஞ்சல்‘ படத்திற்காக இதுவரை ரூ.13 கோடி செலவாகியுள்ளது.

இந்த படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்‘ படத்தை வெளியிட்டால் எனக்கு இழப்பு ஏற்படும். ஆகவே மீதமுள்ள படப்பிடிப்பை உதயநிதி முடித்து தரவேண்டும். ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை ‘மாமன்னன்‘ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் “ என்று தயாரிப்பாளர் ராமசரவணன் மனுவில் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்