தமிழில் ‘கிழக்கே போகும் ரெயில்‘ படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனா வலம் வந்தவர் நடிகர் சுதாகர்.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் சுதாகர் உடல்நிலை குறித்து இணையதளங்களில் திடீரென வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது 64 வயதாகும் சுதாகர் தந்தையர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மகனுடன் பங்கேற்று கேக் வெட்டினார். அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் மாறிப்போய் இருந்தார்.
பின்னர் சுதாகர் அளித்துள்ள பேட்டியில், “ பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா ஜோடியாக நடித்தேன். எங்கள் ஜோடி அந்த நாட்களில் பெயர் பெற்றது. அதனால் எங்கள் இருவருக்குமே பட வாய்ப்புகள் குவிந்தன. பிறகு தமிழில் எனக்கு வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திராவில் வந்து தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தேன்.
தமிழ்நாட்டில் எனக்கு இருந்த நிறைய சொத்துக்களை விற்றுவிட்டேன். உடல்நல குறைவால் அவதிப்படுகிறேன். ஆனால் சிலர் நான் மரணம் அடைந்து விட்டதாக தவறான வதந்திகளை பரப்பியபோது மிகவும் வருத்தம் அடைந்தேன் “ என்று நடிகர் சுதாகர் பேசியுள்ளார்.










