தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து‘ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். இப்படங்களின் மூலம் அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
விஜய் தேவர்கொண்டாவின் ‘டியர் காம்ரேட்‘ மற்றும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்‘ படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளியான ‘பாச்சுவும் அற்புத விளக்கும்‘ என்கிற படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜஸ்டின் பிரபாகரன்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி என்னும் மரகதமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜஸ்டின் பிரபாகரன் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார்.
மேலும் ‘டியர் காம்ரேட்‘ படத்தில் இடம்பெற்ற ‘காதலே‘ என்கிற பாடல் தன் மனதுக்கு மிக நெருக்கமான பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பாச்சுவும் அற்புத விளக்கும்‘ படத்திலும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை சிறப்பான பங்கு வகித்தது என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜஸ்டின் பிரபாகரன் கூறுகையில், “ மூத்த இசையமைப்பாளரும் மிகப்பெரிய ஜாம்பவானுமான உங்களிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைப்பது என்னை மென்மேலும் சிறப்பாக பயணிக்க உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கிறது“ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.










