தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வேக வேகமாக நடைபெற்று வருகிறது. இண்டர்நெட் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இருக்க கூடிய மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 31-12-2022 நிறைவடைகிறது. இன்னும் சுமார் 1.06 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மின்நுகர்வோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த வாரம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘‘மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. அதன்பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, கால அவகாசம் நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.










