எஸ்ஐ தேர்வில் மகளுடன் போட்டியிடும் தாய் – தெலங்கனானாவில் சுவாரஸ்யம்
காவல்துறை எஸ்ஐ தேர்வில், தனது மகளுடன் தாய் போட்டியிட்டு வருகிறார். அவர்களை, அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர்.
காவல்துறையில் பணியாற்றுவதற்காக இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். குறிப்பாக பெண்கள், ஆண்களுக்கு ஈடாக செயல்பட வேண்டும் என அனைத்து துறையிலும் கால் பதித்ததுபோல் காவல்துறையிலும் சாதனை படைத்து கொண்டுள்ளனர். அந்த வகையில், மகளுடன் போட்டியிட்டு எஸ்ஐ தேர்வு எழுதி வரும் தாயை, அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம், தெலங்கானா மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களது மகள் திரிலோகினி (21). நாகமணி அங்கன்வாடி ஆசிரியராக பணியாற்றினார். ஆனால் அவருக்கு விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் தனது கணவரின் அனுமதியுடன் கோகோ, கபடி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் கவனம் செலுத்தினார்.
இதையொட்டி மாநில, தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் 10 பதக்கங்களையும், 5 கோப்பைகளையும் வென்று வீராங்கனையாக பெயர் எடுத்தார். இதற்கிடையில் நாகமணி, கடந்த 2007ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் 2020ம் ஆண்டு காவல்துறையில் பெண் காவலராக சேர்ந்தார். தற்போது அவர், தெலங்கானா மாநிலம், முலுகு காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், தாயைப் போலவே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என நாகமணியின் மகள் திரிலோகினி பட்டமேற்படிப்பை படித்து கொண்டே, காவல்துறையில் பயிற்சி பெற்று வருகிறார்.
சமீபத்தில் தெலங்கானாவில் காவல்துறையில், எஸ்ஐ பணிக்கான தேர்வு நடந்தது. இதில் தாயும், மகளும் ஒன்றாக விண்ணப்பித்தனர். நூற்றுக்கணக்கானோருடன் அவர்கள் போட்டி போட்டு தேர்வில் பங்கேற்றனர். இதனை பலரும் ஆச்சரியம் அடைந்ததுடன், பாராட்டையும் தெரிவித்தனர். தேர்வில் 2 பேரும், உடல் தகுதியிலும், நீளம் தாண்டுதல், 800மீ ஓட்டப் பந்தயத்திலும் தேர்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். தாயும், மகளும் தொடர்ந்து, எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து நாகமணி கூறுகையில், எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். மகளுடன் போட்டி போடும் நிலை ஏற்படும் என்று நான் எப்போதும் நினைத்ததே இல்லை. மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பார்க்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு. நாங்கள் 2 பேரும் விரைவில் எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. என்ன ஆனாலும், என் மகள் எனக்கு போட்டியாளர்தான் என்றார்.










