‘என் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர் சரத்பாபு‘ – கண்ணீர் மல்க நடிகர் ரஜினி உருக்கம்

நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

சரத்பாபு உடன் ‘முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து‘ என பல படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ என் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர். சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை தேத்து நீ ரொம்ப நாள் வாழணும் என்பார். நான் சிகரெட் பிடித்தால் கூட அதை புடுங்கி அணைத்து தூக்கி போட்டு விடுவார்.

அவர் முன்னால் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். ‘அண்ணாமலை‘ படத்தில் வரும் சவால் டயலாக் சரியாக வரவில்லை. 10-15 டேக் போனது. அப்போது படப்பிடிப்பில் ஒரு சிகரெட் கொண்டு வர சொல்லி எனக்கு கொடுத்தார். அதன்பின் தான் அந்த டேக் ஓகே ஆனது.

அவரின் அன்புக்காக இதை இங்கு சொல்கிறேன். என்னை உடம்பு பார்த்துக்கோ என சொல்லியவர் இப்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ரொம்ப நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தி அடையணும்“ என்றார்.

முன்னதாக ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ இன்று (மே 23) என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்‘ என பதிவிட்டு இருந்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்