தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா மகன் நாக சைதன்யா. இவர் தெலுங்கு திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தமிழ் திரையுலகில் ‘கஸ்டடி‘ படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில், இந்தபடம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக கடந்த மாதம் வெளியானது.
இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் பெரும் தோல்வியடைந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை தந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் 68-வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் ‘கஸ்டடி‘ படத்தின் கதாநாயகனான நாகசைதன்யாவும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
கார்த்திகேய பட இயக்குனர் சந்து மாண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க போகிறார். முதல் முறையாக இந்த படத்தில் அவர் மீனவர் வேடத்தில் நடிக்க உள்ளார். இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது.
இதற்காக மீனவர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து வருகின்றனர் படக்குழுவினர். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.










