இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்‘. இதில் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சைப் அலிகான், கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் 6 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதனிடையே ‘ஆதிபுருஷ்‘ திரைப்படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளிலும் ஒரு சீட்டை ஆஞ்சநேயருக்கு ஒதுக்க வேண்டும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த செயல் தற்போது ரசிகர்களிடையை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ராமாயணம் எங்கெல்லாம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் தோன்றுவதாக நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையை மதிக்கும் விதமாக ‘ஆதிபுருஷ்‘ திரைப்படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளில் அனைத்து காட்சிகளிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு இருக்கை ஒதுக்க வேண்டும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.










