‘இந்தியன் 2‘ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2‘ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ‘இந்தியன்‘ படத்தின் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் விபத்து, உயிரிழப்பு, தயாரிப்பாளரிடம் மோதல் என ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்திற்கு வந்துள்ளது.

ஆனாலும் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. கமல்ஹாசன், ஷங்கர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படம் ‘விக்ரம்‘ படத்தின் வசூலை முறியடிக்கும் அளவில் இருக்கும் என இப்போதே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

பொதுவாக ஷங்கர் அவரது படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆற அமர பொறுமையாகத்தான் செய்வார். அதோடு தெலுங்கிலும் அவர் இயக்கம் ‘கேம் சேஞ்சர்‘ படத்தின் வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

ரஜினியின் ‘ஜெயிலர்‘ படத்திற்கான வெளியீட்டு அறிவிப்பு வந்துவிட்ட நிலையில் ‘இந்தியன் 2‘ பட வெளியீட்டு அறிவிப்பும் வராதா என கமல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது 2024 பொங்கலுக்கு வருமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்